சுருக்கம்:
தமிழர்களின் பண்பாடு உன்னத நிலைபெற்றிருந்த சோழர் ஆட்சிக் காலத்திலே 'காவியங்கள்' முதன்மையானதொரு இலக்கிய வடிவமாக விளங்கின. அதேவேளை சோழப் பேரரசில் அரச செல்வாக்கோடு பெருஞ்சிறப்புற்றிருந்த சைவத்தின் வரலாற்றை எழுதுகின்ற பணிகளும் இடம்பெற்றன. இதன் விளைவாகவே பெரியபுராணம் தோன்றியது.
பெரியபுராணம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் வரும் சைவத் தொண்டர் கதைமரபின் தொகுப்பாக அமைந்தது. இந்நூலை இயற்றிய சேக்கிழார் சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையினையும் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக் கொண்டு தென்னகத்தில் சைவநெறி ஓங்கச் செய்த நாயன்மார் 63 பேரின் வாழ்வைப் பாடுகின்றார். அவ்வாறு பாடும்போது தனது காலக் காப்பிய மரபை உள்வாங்கியும் புதிய காப்பிய மரபுகளை ஆக்கியும் தனது நூலைப் படைத்தார். அது ஒரு தொடர்நிலைச் செய்யுளாகவே அமைகின்றது.
சேக்கிழார் காப்பியத்தின் அமைப்பைத் திட்டமிட்டே செய்துள்ளார் என்பது அதன் அமைப்பினூடாகவும் தெரிகின்றது. சேக்கிழாரின் காப்பியப் புனைவு உட்பகுப்பு நிலையில் காண்டம் எனப்படும் பிரிவாகவும் சருக்கம் எனச் சிறு பிரிவாகவும் அமைந்துள்ளது. சேக்கிழார் தனது நூலை பெருங்காப்பிய இலக்கணம் பொருந்த நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு முதலியவற்றை அழகுற அமைத்துள்ளார். சேக்கிழார் 63 நாயன்மாரின் வரலாற்றைக் கூறினும் சுந்தரரையே தன்னிகரில்லாத் தலைமையாகக் கொண்டிருப்பது தெரிகின்றது. சுந்தரர் வரலாற்றை ஒரு தொடராகக் கூறாது நூலின் முதல், இடை, கடை என்ற மூன்று பகுதிகளிலும் வைத்தும் சுந்தரரால் குறிக்கப்பட்ட நாயன்மார்களின் வரலாறுகளை இடையிலே வைத்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளை விளக்கியும் மங்கலமாக காவியம் நிறைவுறுகின்றது.
காப்பியக் கருப்பொருளைப் பொறுத்தும் பெரியபுராணம் தனித்துவமானது. சேக்கிழார் தனியொருவர் வரலாற்றையே காவியமாகப் பாடும் மரபை மாற்றி தொண்டாகிய பண்பைக் காப்பியக் கருப்பொருளாக்கினார். பெரியபுராணம் காவிய வரலாற்றில் ஒரு வளர்ச்சியின் வெளிப்பாடாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: காவியங்கள், பெரியபுராணம், சேக்கிழார் சுந்தரர், சைவநெறி, காப்பிய மரபு, அறம், பொருள், இன்பம், வீடு.
|
துணைநூற்பட்டியல்:
[1] இராசமாணிக்கனார், மா., 2002, பெரியபுராண ஆராய்ச்சி, சென்னை: அலமு பதிப்பகம்.
[2] கைலாசபதி,க., 1996, அடியும் முடியும், பூபாலசிங்கம் புத்தக சாலை, கொழும்பு.
[3] ஞானசம்பந்தன், அ. ச., 1987, பெரியபுராணம் - ஓர் ஆய்வு, காஞ்சிபுரம் தத்துவ மையம், சென்னை.
[4] தனலெச்சுமி. க., வளையாபதி காப்பியத்தில் காணலாகும் அறநெறிச் சிந்தனைகள், தமிழ் ஆய்வு ஆராய்ச்சியின் சர்வதேச நடுவர் இதழ், Volume .2, Issue 2, 2020> Tamil Nadu: Mahizhini publication
[5] ராமசுப்பிரமணியன், வ. த., 2002, பெரியபுராணம் - மூலமும் தெளிவுரையும், திருமகள் நிலையம், சென்னை.
[6] மணவாளன், அ. அ., 2006, உலகத் தமிழ் இலக்கிய வரலாறு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
[7] வையாபுரிப்பிள்ளை,எஸ்., 2010, தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம், அலைகள் வெளியீட்டகம், சென்னை.
|